Saturday, December 31, 2011

பொழுது இன்னும் விடியல...


ஞாயித்து கெழம படம் முடிஞ்சிருந்தது. தலாரி மாமா டி.விய நிறுத்திட்டுஏஞ்சிப்போங்க ஏஞ்சிப்போங்கன்னு எல்லாரையும் வெரட்டுனாரு. எல்லாரும் எந்திருச்சு சத்தம் போட்டுக்கிட்டும் சிரிச்சுக்கிட்டும் வெளிய போய்கிட்டுயிருந்தாங்க. நான் எந்திரிக்காம நிறுத்துன டி.விய பாத்துக்கிட்டே ஒக்காந்திருந்தேன்.

இன்னைக்கு காலையிலே எந்திரிச்சிட்டேன். திரும்பவும் தூங்கலான்னு நெனைச்சா தூக்கமே வரல. ‘தூக்கம் வரலனா என்ன? இன்னைக்கு சாயங்காலம் படம் பாக்கலாம்அப்படினு சந்தோசமா முழுச்சுக்கிட்டே படுத்துக் கெடந்தேன். அப்புறமா வெளையாட போனன். ரொம்ப நேரமா வெய்யல்ல ஃபீல்டிங் நின்னு கடைசியா பேட் புடிக்க போனன். ரெண்டாவது பந்திலே அவுட்டாயிட்டேன். கடுப்பாயிருந்துச்சு. ‘சரி பரவாயில்ல நாம தான் இன்னிக்கு சாயங்காலம் ஜாலியா படம் பாக்கலாமேன்னு நெனைச்சிக்கிட்டேன். அம்மா வச்ச கொழம்பு நல்லாவேயில்லஇன்னிக்கு சாயங்காலம் 4 மணிக்கு படம் பாக்கப்போறேன் அதனால நல்லாயில்லனாலும் நான் தின்பேன், ங்கிற மாதிரி நான் ஒண்ணும் சொல்லாமலே சாப்டேன். அப்படிலாம் நெனைச்சிக்கிட்டு இருந்த படம் இப்ப முடிஞ்சிருச்சு. என்னலா ஒத்துக்க முடியாம அப்படியே ஒக்கந்திருந்தேன். மாமா என்ன பாத்துட்டாரு. நான் வேகமா போர மாதிரி எந்திரிச்சு மெதுவா அவர அப்பப்ப பாத்துக்கிட்டு நடந்தேன். ‘ இவரு எல்லாரையும் தொரத்திட்டு மறுபடியும் டி.வி போடுவாரு நாம கடசியா போனா நம்ல ஓரமா ஒக்காந்துக்கடா ன்னு சொல்லுவாருன்னு நெனைச்சேன். அவரு என்னையும் வெளிய தொரத்திட்டாரு.

தெருவு பயங்கர இருட்டா இருந்துச்சு. ஓரமா கெடந்த மெலாருக்கு பக்கத்துல பூன வேற கத்திக்கிட்டேயிருந்துச்சு. ‘முரளி பாவம் அவருக்கு ஒடம்பு சரியில்லாம போயிடுச்சு. இவங்க ரெண்டு பேரும் சேந்தாங்களா இல்லியான்னே தெரியல. சேர்ற மாதிரி காட்டியிருந்தா கூட கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கும். அவரால இப்ப நல்ல செய்திய கேக்கவே முடியாது. இவங்க எப்படி அவருகிட்ட சொல்ல போறாங்கன்னே தெரியல. அவரு ஊருக்கு போயிட்டாரு. இவங்க இங்கேயே இருக்காங்க. காதல சொல்லலன்னா கூட பரவாயில்ல. ஒரு தட ஊருக்கு போயி அவர பாத்துட்டு வரலாம்எனக்கு மனசு முழுக்க கல்லு மாதிரி இருந்துச்சு. ஒடம்ப அசைக்காம அப்படியே இருட்டுல நடந்துவந்துக்கிட்டேயிருந்தேன். இத விட சோகமான ஒரு விஷயம் உள்ளுக்குள்ள என்ன அழுத்திக்கிட்டே இருந்துச்சு. இப்ப நடந்து வரும் போதும், நான் படம் பாத்துக்கிட்டுயிருந்த அப்பேலேர்ந்தும் இருந்துச்சு.

எட்டு நாள் லீவு முடிஞ்சு வெளியூர் பள்ளிக்கொடத்துக்கு நான் காலையிலே போவுனும். இனிமே எப்ப இங்க வரப்போறன்னே தெரியல. முழாண்டு பரிச்ச முடிஞ்சாதான் வரமுடியும். நெனைக்கிறப்பவே தொண்டையில ஏதோ ஒண்ணு அடைச்சுகிச்சு. அங்கப்போயி தெனமும் நான் அழுதுகிட்டே இருப்பேன். நாளைக்கு இன்னேரம் கூட அழுதுக்கிட்டுயிருக்கலாம். எனக்கு அத நெனக்க புடிக்கல. வூட்டுக்கு வேகமா போயிகிட்டுயிருந்தேன். ‘அம்மா பக்கத்து வீட்டு பெரியம்மா கூட பேசிகிட்டுயிருக்கும். அப்படியே போய் பக்கத்துல ஒக்காந்து ஏதாவது பேசலாம். இல்லன்னா அவங்களுக்கு எடையில படுத்து அப்படியே தூங்கிடலாம்’. வீட்டுக்கு வந்தேன். வாச வெறிச்சோடி கெடந்துச்சு. யாரையும் காணும். ”அம்மா அம்மா”ன்னு சத்தமா கூப்ட்டு பாத்தன். ஒரு சத்தத்தையும் காணும். ‘தெனமும் ஒக்காந்து பேசிக்கிட்டேயிருப்பாங்க. இன்னைக்கு மட்டும் எங்க போயி தொலஞ்சாங்கன்னு தெரியல’. கொட்டாயிக்கு மாடுகட்ட போயிருந்தாலும் போயிருக்கும். திண்ணையில வந்து ஒக்காந்தேன். மணல் கொட்டியிருந்த எடம்,அடுப்பாங்கற வூடு எல்லாம் இருட்டுகுள்ள இருக்கிற மாதிரி இருந்துச்சு. ‘சே… மத்யானமே ஒரு தடவ இதலாம் நல்லா பாத்துருக்கலாம். இனிமே வெளிச்சத்துல இதலாம் எப்ப பாக்க போறோமோ’. திண்ணையில ஒருக்களிச்சு தெருவ பாத்த மாதிரி படுத்துருந்தேன்.

ஒரு சார் வூட்ல தான் தங்கி படிக்கிறேன். அவர்ட்ட ஊருக்கு போறேன்னு சொன்னாலே மொதுவுல அடிப்பாரு. அங்கயிருக்கிறப்பலாம் எனக்கு இருட்டானாலே அழுவ வர மாதிரி இருக்கும். அப்படிதான் இப்பவும் இருக்குது.

வெளி ஊர் பள்ளிக்கொடத்துல என்ன சேக்க போறதா அப்பா சொன்னதும் எனக்கு பயங்கற ஜாலிய இருந்துச்சு. ஊர்ல பாக்குறவங்கலாம் என்ன கூப்ட்டு கூப்ட்டு பேசினாங்க. எனக்கு பெருமையா வேற இருந்துச்சு. மொத நாளு அப்பாவும் அம்மாவும் வந்து என்ன சார் வூட்டுல உட்டுட்டு போயிட்டாங்க. அப்பலாம் எனக்கு ஒண்ணும் தெரியல. ஸ்கூல் வுட்டு சாயங்காலம், சொந்த கார பையன் அங்க ஒருத்தன் இருந்தான், அவன் கூட வெளையாண்டுக்கிட்டுயிருந்தேன். இருட்ட ஆரம்பிச்சுயிருந்தது. அவனுக்கு ஹாஸ்ட்டல்ல பெல்லு அடிச்சாங்க. “சரி நீ சாரு வூட்டுக்கு போ”ன்னு சொல்லிட்டு அவன் ஓடிட்டான். அப்ப தான் எனக்கு வூட்டு ஞாபகம் வந்துச்சு. திரும்பி பாத்தன். கிரவுண்ல ஒருத்தரையும் காணும். இருட்டிடுச்சு. திடீர்ன்னு அந்த எடம்லாம் புதுசா நான் வேற எங்கே இருக்கிற போல இருந்துச்சு. நெஞ்சுலாம் அடைச்சுகிச்சு. எங்க இருக்கோம் ங்கிறதே மறக்கிற மாதிரி தோணுது. என்ன பண்றதுன்னு தெரியல. ஹாஸ்டலுக்கு அந்த பையன தேடிகிட்டு ஓடினன். என்னால அழுவய அடக்க முடியல. அவன் தப்பா நெனச்சிப்பான்னு அழாம நின்னன். வந்து “என்ன”ன்னு கேட்டான். நான் அழுவலன்னாலும் கண்ணுலேர்ந்து தண்ணி கொட்டிச்சு. அவன் புரிஞ்சுக்கிட்டான். “ நான் தான் அப்பவே சொன்னல்ல இங்க வந்து சேராதன்னு” அவன் சொல்லி முடிக்கிறதுக்குள்ள நான் சத்தம்போட்டு அழ ஆரம்பிச்சிருந்தேன். அவன் என்ன விட சின்ன பையன். என்ன “அழாத அழாத”ன்னு சொல்லிக்கிட்டே பக்கத்துல நின்னான். எனக்கு பயங்கர கோவம் வந்துருச்சு. “இப்டிலாம் இருக்கும்னு நீ முன்னாடியே ஏன் சொல்லல”ன்னு அவன அடிக்கிற மாதிரி கேட்டேன். அவன் சோகமா என்ன பாத்துகிட்டே நின்னான். அப்புறமா பிரேயருக்கு நேரமாச்சின்னு போயிட்டான். அங்கே அழுதுகிட்டு கொஞ்சநேரம் ஒக்காந்திருந்தேன். எழுந்துருச்சு கண்ண தொடச்சிகிட்டு சார் வூட்டுக்கு போயிட்டேன்.

அப்படியே திண்ணயில ஒருக்களிச்சு படுத்த நான் தெருவுல சத்தம் கேட்டு எழுந்திருச்சி பாத்தன். மதனும் ஹரியும் கத்திக்கிட்டே ஓடி வந்தானுவ. மதனு என் கிட்ட ஓடி வர ஹரி வந்து அவன புடிச்சிட்டான். ஹரி தெருவுல பின்னாடி வந்த பசங்கல பாத்து கத்துனான். “மதனு அவுட்ரா அவன் தான் இனிமே புடிக்கனும்”. மதனு என்ன வெள்ளாட கூப்டான். நீ ஒடுரா நான் புடிக்கிறேன்னும் சொன்னான். நான் வரலன்னு சொல்லிட்டேன். நான் போயி வெள்ளாண்டுட்டு வந்தன்னா அம்மா தூங்கினாலும் தூங்கிடும். அப்புறம் சோரும் நான் தான் போட்டு திங்கனும். அப்புறம் அது கிட்ட பேச கூட முடியாது. இவனுங்கள மாதிரி இந்த ஊரு பள்ளிக்கொடத்துலே இருந்திருந்திருந்தா ரொம்ப ஜாலியா இருந்திருக்கும். நான் எழுந்திருச்சு வீட்டுக்குள்ள போயி மடிச்சு ஓரமா கெடந்த பாயில படுத்துக்கிட்டேன். பசங்க வெளையாடுற சத்தம் கொஞ்ச நேரத்துல மறைஞ்சுப் போச்சு.

செவத்த பாத்த மாதிரியே படுத்துக்கெடந்தேன். அப்பா வந்து சாப்புட ஆரம்பிச்சிருந்தாரு. அம்மா பக்கத்துல ஒக்காந்துருந்துச்சு. ரொம்ப நேரமா எல்லாத்த பத்தியும் ரெண்டு பேரும் பேசிக்கிட்டுயிருந்தாங்க. “அவன் சாப்டானா… அப்பா சரவணா”ன்னு என்னப் பாத்து கூப்ட்டாரு. எனக்கு கண்ணுலேர்ந்து தண்ணி வர மாதிரி இருந்துச்சு. ‘இப்பவாவது நான் ஒருத்தன் படுத்துருக்கேன்னு இவங்களுக்கு தெரிஞ்சதே’. “கொஞ்சோண்டு சாப்ட்டு படுத்துக்க எழுந்திரு எழுந்திரு”. எனக்கு பயங்கர கோவம். ‘நானே எவ்வளவு அழுவயோட இருக்கேன் என்ன அங்க அனுப்பறதுக்கு சாப்புட சொல்றீங்களா’ நான் சத்தம் போடாம இருந்தன். “டேய்” அப்பா திரும்பவும் கூப்ட்டாரு. ‘எனக்கு வாணாம்’ அழுவுர கொரலிலே சொன்னன். அப்பவாவது என்ன எழுப்பி ஏண்டா இப்படி இருக்கன்னு கேப்பாங்கன்னு நெனைச்சேன். “வுடு, அவன் பொழுதுயிருக்கதான் சாப்ட்டான். காலையிலே போவனும்யில்ல தூங்கட்டும்” அம்மா மேல எனக்கு பயங்கர கோவம். அப்பா என்ன எழுப்பி நான் சாப்ட்டா பள்ளிக்கொடம் நாளைக்கு போவேணான்னு சொன்னாலும் சொல்லிருப்பாரு. அம்மா அதயும் தடுத்துருச்சு. சாப்பாடு வேணான்னு சொல்லிட்டேன். பசிக்கிற மாதிரி வேற இருந்துச்சு.

‘டக்’ன்னு முழிப்பு வந்துச்சு. நெறய நேரம் துங்கிட்டமான்னு பதட்டமா இருந்துச்சு. படுத்துக்கிட்டே திரும்பி ஜன்னல் வழியா வெளிய பாத்தன். இன்னும் இருட்டாதான் இருந்துச்சு. ஆனா இப்பலாம் ஆறு மணிக்கு தான் விடியுது. பக்கத்துல தம்பி நல்லா தூங்கிட்டுயிருந்தான். மறந்து போயிருந்த சோகம் வெடுக்குனு வந்து ஒட்டிகிச்சு. அவன பாக்குறப்போ நாம இவனா பொறந்திருக்கலாம்னு இருந்துச்சு. அம்மா பக்கத்துல படுத்து அவன் நல்லா தூங்குவான், அவன் எழுந்திருச்சு அம்மா கூட பேசுவான். அம்மா டீ போட்டு தருவாங்க அவனுக்கு. அவன் சிரிச்சிகிட்டே அம்மா கூட பேசிக்கிட்டே குடிப்பான். அப்பா காலையிலே கொல்லைக்கு போவாரு. இவனும் மருந்து கூடய எடுத்துட்டுப் போற சாக்குல அப்பா பின்னாடியே ஓடிடுவான். அப்புறம் சிரிச்சுக்கிட்டே அவன் வரப்புல ஓடி ஓடி வெளையாடுவான். அப்பா தூரத்திலிருந்து அப்ப அப்ப அவன பாத்துக்கிட்டேயிருப்பாரு.

நான் எழுந்துருச்சு வந்து மணிய பாத்தன். அஞ்சு ஆவ இன்னும் பத்து நிமிஷம் இருந்துச்சு. அப்பா பெஞ்சுல படுத்து நல்லா கொறட்ட வுட்டு தூங்கிகிட்டு இருந்தாரு. நான் எப்பவாவது ராத்திரியில முழிச்சுகிட்டேனா அத கேட்க பயங்கர எரிச்சலா இருக்கும். ஆனா அத இப்போ கேட்க ரொம்ப சொகமா இருந்துச்சு. ஆறு மணிக்கு தான் பஸ்சு. அஞ்சே காலுக்கு எழுந்துருச்சா போதும் அப்படின்னு நெனச்சு திரும்பவும் போய் படுத்துக்கிட்டேன். தம்பி ஏதோ பொலம்புனான். நான் மேல கை வச்சு தட்டிக்கொடுத்தேன். அம்மா பொடவய போத்திருந்தேன். கத்கதன்னு நல்லாயிருந்துச்சு. தூக்கம் வரல முழிச்சுக்கிட்டே கெடந்தேன். ‘பகீர்’ன்னு இருந்துச்சு. கடிகார சத்தம். இந்த அஞ்சு மணி சத்தம் என்ன பாத்து சீக்கிரம் இங்கிருந்து தொலைஞ்சுப்போ தொலைஞ்சுப்போன்னு சொல்ற மாதிரியே இருந்தது. அம்மா ஏதோ மொனவிக்கிட்டே பொரண்டு படுத்தாங்க. முன்னாடிலாம் அம்மாவும் எழுந்துருச்சு நான் கெளம்புறவரைக்கும் என் கூடவே இருக்கும். அப்பலாம் எனக்கு இவ்வளவு சோகமாயிருக்காது. ஒரு தடவ அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல. அப்போ காலையிலே எழுந்திருக்கல. அப்பலேர்ந்து நான் தனியாவே கெளம்புறேன்.

குளிக்கலான்னு தோட்டத்துக்கு வந்தன். அம்மா இராத்திரியே தண்ணி புடுச்சி ஊத்திருந்தாங்க. தொட்டி நெரம்பியிருந்துச்சு. தண்ணி ரொம்ப ஜில்லுன்னு இருந்துச்சு. காத்து வேற குளுர்ற மாதிரி அடிச்சது. ‘நாம தான் சீக்கிரமாவே சாரு வூட்டுக்கு போயிடுவோமில்ல அங்க போயி குளிச்சிகிலாம் எதுக்கு நேரத்த வீணாக்குனும்’னு நெனைச்சு மூஞ்சிய மட்டும் கழுவிட்டு ஓடி வந்து அம்மா பக்கத்துல படுத்துக்கிட்டேன். இன்னும் அர மணி நேரம் தூங்கலாம். எனக்கு தாங்க முடியாத சந்தோஷமா இருந்துச்சு. போர்வய இழுத்து மொகத்த மூடிக்கிட்டேன்.

“டேய் டேய் சரவணா” அம்மா அதட்டி எழுப்புனாங்க. நான் எழுந்துருச்சு ஒக்காந்தன். “மணி ஆறாவ போவுது பஸ் வந்துரும்டா”. வெளியிலிருந்து அப்பா குரலும் கேட்டது. “கெளப்பி வுடு அவன கெளப்பி வுடு அவன”. நான் தட புடன்னு எழுந்துருச்சு பைய எடுத்து மாட்டிக்கிட்டேன். “குளிக்கிலேயாடா” அம்மா என் பின்னாடி வந்துகிட்டே கேட்டுச்சு. “நான் முன்னாடியே கெளம்பிட்டேன்” “காச எடுத்துகிட்டியா” “ம்”. இப்போ அப்பா ஒக்காந்திருந்த பெஞ்சுக்கு பக்கத்துல வந்துட்டேன். “ஓடுனா போல போப்பா பஸ் சத்தம் கேக்குது”. நான் ஒண்ணும் சொல்லாமலே தெருவுக்கு வந்து சர சரன்னு நடக்க ஆரம்பிச்சேன். வெளிய வந்த அம்மா “பாத்து போடா”ன்னு சொன்னாங்க. பஸ் ஹாரன் சத்தம் மாதிரி கேட்டுச்சு. அந்த சோகத்திலும் நான் வேகமா ஓட ஆரம்பிச்சேன். ஓட்டத்திலே அழுவயும் வந்துடுச்சு. வாய்வுட்டு சத்தம் போட்டு அழுதுகிட்டே ஓடி வந்தன். தெரு மொனையில லாரி ஒண்ணு திரும்பிபோச்சு. அத பாத்த ஒடனே நட பொருமையா ஆயிருச்சு ஆனா அழுவ முழுசா நிக்கல. ‘ பஸ் வரல இன்னும் ஊருக்குள்ள தான் இருக்கோம். எல்லாத்தயும் பாத்துக்கிட்டாவது கொஞ்சம் நேரம் இருக்கலாம்’னு நெனைச்சேன். கண்ணுலயிருந்த தண்ணிய தொடச்சிகிட்டு எங்க ஊரு பள்ளிக்கூட கொடிக்கட்டையில வந்து ஒக்காந்தன். பக்கத்துல தான் பஸ் ஸ்டாப்.

‘நாளைக்கு இன்னேரம் சாரு வூட்டுல தூங்கிகிட்டுயிருப்போம். நாம இப்ப ஒக்கந்திருக்கிற இந்த எடத்துல யாராவது இருப்பாங்களா. இவ்வளவு சீக்கிரம் யாரும் வந்துருக்க மாட்டாங்க.’ வெறிச்சினு கெடந்த இந்த எடம் ஞாபகம் வந்துச்சு. என் சோகத்த இன்னும் அது கூட்ற மாதிரி இருந்துச்சு. சரி வேற ஏதாவது யோசிக்கலாம்னு நெனச்சுக்கிட்டே அண்ணாந்து தூரமா பாத்தன். ‘பல பல’ன்னு விடிய ஆரம்பிச்சிருந்துச்சு. தூரத்திலயிருந்த டீக்கட கொட்டாயில சிமினி விளக்கு எரிஞ்சுகிட்டுயிருந்துச்சு. யாரோ ரெண்டு மூணு பேர் ஒக்காந்திருந்தாங்க. அவங்க சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே பேசிக்கிட்டுயிருந்தாங்க. அது மட்டுமில்லாம இன்னும் நெறையா இன்னிக்கு பூரா பேசிக்கிட்டேயிருப்பாங்க போலயிருந்துச்சு. அப்படியே தெடல் பக்கம் போவாங்க, அப்படியே வாய்க்கால்ல குளிப்பாங்க, அப்புறம் திரும்ப இங்க வந்து டீ குடிப்பாங்க. வூட்டுக்கு போவாங்க… என்ன மாதிரி இருக்க மாட்டாங்க. அவங்கலாம் ரொம்ப ஜாலியா இருப்பாங்க’. தெருவுல அங்க அங்க லேசான சத்தம் வர ஆரம்பிச்சிருச்சு. செல பேரு எழுந்துருச்சிருப்பாங்கன்னு நெனைக்கிறன். இந்நேரம் அம்மா பால் கரக்க கொட்டாயிக்கு போனாலும் போயிருக்கும்.

வெய்ய சுல்லுன்னு அடிச்சுது. மணி ஆறே முக்கால் இருக்கும். இன்னும் பஸ் வரல. முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஊட்லே கொஞ்ச நேரம் இருந்திட்டாவது வந்திருக்கலாம். பஸ்சு வரவே இல்லன்னா அப்படியே ஊட்டுக்கு ஓடிடலாம். ஆனா அப்பா வுடமாட்டாரு. சைக்கில்ல ஏத்திட்டு போயி ரோட்ல பஸ் ஏத்தி வுட்டுருவாரு. நான் ஒக்காந்திருந்த கொடி கட்ட பள்ளிகூட கிரவுண்ட் குள்ள இருந்துச்சு. மதனு பேட்டும் பந்தும் எடுத்துக்கிட்டு வந்தான். என்ன பாத்துட்டு சிரிச்சிக்கிட்டே போனான். நேத்து இவன வெளையாட கூப்டேன் எட்டறைக்குதான் வந்தான். இன்னிக்கு மட்டும் சீக்கிரமாவே வந்துட்டான். நான் போறப்பதான் நெறைய நேரம் வெளையாடுவானுவ. அந்த பில்டிங் ஓரமா பக்கத்து தெரு அருணு லாக் போட்டு சும்மா குண்ட போட்டு அடிச்சான். இவனொட ஃபிரண்டுக்காக நின்னுக்கிட்டுயிருக்கான் போலிருக்கு. குண்ட தூக்கிப்போட்டு வேற குண்டால வேகமா அடிக்கிறான். இது வெளையாட்டேயில்ல இப்படிலாம் வெள்ளாட மாட்டோம். இவன் வேணுங்கின்னே நான் பாக்கனும்னே வெளையாடுறான். என்னமோ இவனுக்குதான் இந்த ஊரு இந்த கிரவுண்ட் எல்லாம் சொந்தம் மாதிரி வெள்ளாண்டுகிட்டேயிருக்கான். ‘நீ எங்கேயோ ஓட போறவன் நீ இதலாம் பாக்காத’ இங்கிற மாதிரியும் இருந்துச்சு அவனோட பார்வ. வயித்த வேற வலிக்கிற மாரி இருக்கு. இப்ப வூட்டுக்கு போனா அப்பா அடிச்சாலும் அடிப்பாரு. சாமிய வேண்டிக்கிட்டேன். ‘நான் சாரு வூட்டுக்கு போற வரைக்கும் ஆயீ வரக்கூடாது’ன்னு.

பஸ் வருது. ஆமா பஸ்ஸேதான் வருதுன்னு ஆனதும் மறுபடியும் எனக்கு ஒரு மாதிரி நெஞ்செல்லாம் பட படன்னு இருந்துச்சு. பஸ் வந்துருச்சு. பஸ்ல ஏறுறன். ரோட்ல நிக்கிறவங்கலாம் வேடிக்க பாத்துக்கிட்டே பேசி சிரிக்கிறாங்க. என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியல. பஸ்ல ஏறிட்டன். பஸ் நகருது. பின் கண்ணாடி வழியா பாக்குறேன். அங்க எல்லோரும் சந்தோஷமா இருக்கிற மாதிரி இருந்துச்சு. ‘என்ன மட்டும் அனுப்பிட்டு எல்லாரும் ஜாலியா இருக்காங்க’.

அப்பா கொடுத்த 20 2இருபது ரூபா. அம்மா கொடுத்த 34 ரூபா. அத நெனைச்சிக்கும் போது கொஞ்சம் தெடமா இருந்துச்சு. ‘நான் தெனமும் மிக்சரும் அல்வாவும் வாங்கித்திம்பேன். இந்த ஊர்ல இருந்தா அது கெடைக்காது’. பஸ் வேகமா போவுது. சீட்ல ஒக்காந்திருந்த என் மொகத்துல காத்து பலமா அடிக்குது. கொஷின் பேப்பருக்கு பதில் எழுதல. பரவாயில்ல. ஸ்கேலால சார் அடிப்பாங்க எனக்கு ஒண்ணும் வலிக்காது. வலிச்சாலும் நான் அழமாட்டேன்.

பஸ்லேர்ந்து எறங்கிட்டேன். பஸ் கடத்தெருவுல நிக்குது. கொஞ்சம் தூரமா நின்னுக்கிட்டு பஸ் உள்ள பாத்தன். யாராவது எங்க ஊரு ஆளு இருந்தா அவங்கள பாத்துட்டு போயிடலாம்னு நெனைச்சேன். கொஞ்ச பேருதான் இருந்தாங்க. அதுல யாருமேயில்ல. அந்த பஸ்ஸ பாத்தா எனக்காக அது பரிதாபபடுற மாதிரி இருந்துச்சு. நான் அடுத்த தடவ ஊருக்கு வறப்ப இது சீக்கிரமாவே என்ன ஊர்ல கொண்டு போயி வுட்டுரும்னு தோணிச்சு. திரும்பி மெல்ல நடந்தேன். டீக்கடையில கண்டக்டர் டீ குடிச்சிக்கிட்டு நின்னாரு. அவர பாத்ததும் எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. இவரு எப்பவாவது பஸ்ஸ நிறுத்திட்டு எங்க ஊர்ல எறங்கி சிகெரெட் குடிப்பாரு. இப்ப போறப்ப கூட அப்படி செய்யலாம். அப்படி செய்றப்ப அங்க இருக்கிற எல்லாரையும் பாப்பாரு. சில பேருகிட்ட பேசுவாரு. எங்க அப்பா கூட அப்ப அங்க வரலாம். இவரு அவருகிட்ட கூட பேசலாம். நான் அவரையே பாத்துட்டு நின்னத பாத்துட்டு கண்டக்டர் என்ன கூப்டாரு. “என்னடா இங்கதான் படிக்கிறீயா”ன்னாரு. நான் அவர பாத்து தலய “ஆமம்”ன்னு ஆட்டுனேன். என் கண்ணுலேர்ந்து தண்ணி ‘தட தட’ன்னு ஊத்திச்சு. “டேய் அழுவாதடா ஏண்டா அழுவுற அழக்கூடாதுடா”ன்னு அவரு கையில வச்சிருந்த நெய் பிஸ்கட்ட குடுத்தாரு. நான் கண்ண தொடச்சிக்கிட்டே அத வாங்கிக்கிட்டேன். டிரைவர் ஹாரன் அடிக்க “அழுவாம பள்ளிக்கொடம் போகனும் என்னா…ம்ம்ம்… போ போ போறீயா”ன்னு கேட்டுக்கிட்டே பஸ்ஸ பாத்து ஓடுனாரு. பஸ் கெளம்பிருச்சு. என் மனசு ‘திக்கு திக்கு’ன்னு அடிச்சிகிட்டேயிருந்துச்சு. இந்த பஸ்சும் என்ன அனாதயா வுட்டுட்டு போற மாதிரி இருந்துச்சு. அது போயி மறஞ்சதுக்கு அப்புறமும் அது போன எடத்தயே பாத்துக்கிட்டு நின்னுக்கிட்டுயிருந்தேன்.

3 comments:

  1. கிட்டத்தட்ட என் வாழ்க்கையும் இப்படிதான்
    இன்னும் அதே பேருந்துக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்
    தொலைந்துபோன என் பள்ளி காலத்தை நினைவுபடுத்திய நண்பனுக்கு நன்றி....

    ReplyDelete
  2. Really touching....n...nice........

    ReplyDelete